ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஆப்ரேஷன் கங்கா மூலம் தாயகம் அழைத்துவரப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் கடந்த சில நாட்களாக அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் கீவ்-வில் இருந்து ரயில்கள் அல்லது வாய்ப்புள்ள பிற வழிகளைப் பயன்படுத்தி உடனடியாக இன்றே வெளியேறுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரஷ்யா தாக்குதல் இன்று இரவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சில நாட்களில் தலைநகரைக் கைப்பற்றலாம் என்ற நோக்கில் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருவதால், இன்று இரவு நவீன போர் விமானங்களைக் கொண்டு உக்ரைனை தாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், " மோசமடைந்து வரும் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கார்கிவ் நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். வாகனங்கள் அல்லது பேருந்துகளைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் ரயில் நிலையத்தில் இருக்கும் மாணவர்கள் பிசோச்சின் (11 கிமீ), பாபாய் (12 கிமீ) மற்றும் பெஸ்லியுதிவ்கா (16 கிமீ) ஆகிய இடங்களுக்கு நடந்தே செல்லலாம். உக்ரைன் நேரப்படி மாலை ஆறு மணிக்குள் அனைவரும் கார்கிவ் நகரிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளது.