Skip to main content

காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை!

நியூயார்க்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மாறிமாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என சீனா தெரிவித்துள்ளது.



நேற்று பாகிஸ்தானின் பிரதமர் சாகித் அப்பாஸி ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகையில், காஷ்மீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தூதர் ஒருவரை ஐநா அமைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், அந்தப் பகுதிகளில் மக்கள் நடத்தும் போராட்டங்களை இந்தியா கொடூரமாக ஒடுக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி தரும்படி பேசிய இந்தியா தரப்பில் கலந்துகொண்ட ஈணம் கம்பீர், அது பாகிஸ்தான் அல்ல ‘டெர்ரரிஸ்தான்’ என்றும், பாகிஸ்தானின் நிலப்பரப்பு தீவிரவாதத்திற்கு ஒத்ததாக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் பேசிய அவர், அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் மற்றும் தாலிபன் தலைவர் முல்லா ஒமருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்தானே நீங்கள் எனவும் குற்றம்சாட்டினார்.

பின்னர் பேசிய சீன வெளியுறவுத்துறை அதிகாரி லூ காங், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும். காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் பார்வை தெளிவானது. காஷ்மீர் பிரச்சனை வரலாற்றைக் கடந்து வந்துவிட்டது. பாகிஸ்தானும் இந்தியாவும் வார்த்தைகளையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ள முடியும். மேலும், இதன்மூலம் காஷ்மீர் பிரச்சனைகளில் நல்ல தீர்வினை எட்டி எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டமுடியும் என சீனா நம்புகிறது என தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்