தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24.01.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்ப்பில் வாதிடுகையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போக்குவரத்துத் துறைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி (06.12.2024) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து அதற்கான அறிக்கையை எனத் தமிழக அரசு அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்தது.
இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பாக முடிவெடுக்கத் தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், மக்களுடன் ஆலோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.