கரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் பரவிவரும் புதியவகை கரோனா, இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்றும், எனவே சிங்கப்பூருடனான வான்வழி தொடர்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சுக்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "சிங்கப்பூர் கரோனா என்று இதுவரை எந்த வைரஸும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே பொறுப்பில்லாமல் யாரும் அவதூறுகளைப் பரப்பக் கூடாது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.