அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ட்ரம்ப் மற்றும் ஜோ பிடென் இடையேயான இரண்டாவது நேரடி விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோர் நாடு முழுவதும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அதிபர் வேட்பாளர்களின் முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இதனையடுத்து இரண்டாவது விவாத நிகழ்ச்சி அக்டோபர் 15 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நான்கே நாட்களில் அவருக்கு கரோனா பாதிப்பு குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. ஆனால், ட்ரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் நேரடி விவாதம் வேண்டாம் மெய்நிகர் விவாதம் செய்யலாம் என ஜனநாயகக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகக்கட்சியின் இந்த யோசனைக்கு ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், காணொளிக்காட்சி வாயிலாக விவாதத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்தார். இதனையடுத்து தற்போது இவர்கள் இருவருக்குமான இரண்டாவது சுற்று விவாதம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 22ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது.