மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றை நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ட்யூமர் கட்டியின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்த போது தற்செயலாகத் தொண்டையின் மேல் பகுதியில் புதிதாக ஒரு உமிழ்நீர் சுரப்பி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். “டூபரியல் உமிழ்நீர் சுரப்பிகள்” (tubarial salivary glands) என்று பெயரிட்டுள்ள இந்த சுரப்பி சுமார் 1.5 அங்குல நீளம் கொண்டவை எனவும், மூக்கு மற்றும் வாயின் பின்னால் உள்ள தொண்டையை உயவூட்டுவதோடு ஈரப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு புற்றுநோய்க்குச் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வின் இணை ஆசிரியரும் நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் கதிர்வீச்சு புற்றுநோயில் நிபுணருமான வவுட்டர் வோகல் தெரிவித்துள்ளார். தலை மற்றும் கழுத்தில் உள்ள புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான கதிர்வீச்சு சிகிச்சையின் போது, உமிழ்நீர் சுரப்பிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற நேரத்தில் இந்த புதிய சுரப்பு உறுப்புகளைக் கொண்டு நோயாளியைக் காக்க முடியுமா என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்போவதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளார்.