Skip to main content

ஆடை விஷயத்தில் மீண்டும் கெடுபிடி காட்டும் சவுதி அரசு... சுற்றுலா பயணிகள் குழப்பம்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்கள் கவனத்தை எண்ணெய் உற்பத்தியிலிருந்து சுற்றுலாத்துறை நோக்கியும் சமீபகாலமாக திருப்பி வருகின்றன.

 

saudi releases new rules on dress codes to tourists

 

 

ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போது சவுதி அரசும் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க இருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் 49 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த சுற்றுலா விசாவை ஆன்லைன் மூலமாக பெற முடியும் எனவும், வெளிநாட்டு பெண்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் இனி தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது பல வெளிநாட்டினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சவுதி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடலை முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியாவிட்டால், சுற்றுலாவரும் பெண்கள் தங்கள் தோள்பட்டை, முழங்கால் போன்ற உடல் பாகங்கள் வெளியில் தெரியாத வகையில்தான் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண், பெண் இருவருமே இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது.  மற்றவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களை எடுப்பது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது,  பிரார்த்தனை நேரங்களில் தேவையற்ற சத்தங்கள் எழுப்புவது உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது என்பது உட்பட 19 விதிமுறைகள் இந்த பட்டியலில் இருக்கிறது. இவற்றை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசின் இந்த புதிய அறிவிப்பு அந்நாட்டிற்கு வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகளை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்