அமெரிக்காவில் வெளிநாட்டினர் க்ரீன் கார்ட் பெறுவது தொடர்பான விதிகளில் அந்நாட்டு அரசு பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தில் க்ரீன் கார்ட் வழங்கும் விதிமுறைகளை தளர்த்தியது. அதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும், வேலை தொடர்பாக குடியேற அந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட விசாவில் 7 சதவீத அளவுள்ள மக்களுக்கு மட்டுமே அமெரிக்க அரசு கிரீன் கார்ட் வழங்கி வந்தது. அந்த வரம்பை முழுவதுமாக நீக்கியது. இது மட்டுமல்லாமல் குடும்பம் சார்ந்து குடியேறுவதற்கு 7 சதவீதமாக இருந்த இந்த வரம்பை 15 சதவீதமாக உயர்த்தியது. இது இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு அந்த உற்சாகத்தை பெருமளவு குறைத்துள்ளது என்றே கூறலாம்.
அமெரிக்க அரசின் இந்த புதிய அறிவிப்பின்படி, அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறுவதற்கு, இந்தியா உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் மருத்துவக் காப்பீடு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை அவர்கள் சார்ந்திருக்காமல், வருமானம் அதிகபடியாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் குறைந்த வருமானத்துடன் கிரீன் கார்ட் வாங்க விண்ணப்பித்திருந்த 4 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.