
சவுதியை சேர்ந்த அல் குனான் என்ற பெண் கடந்த வாரம் பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்களிடமிருந்து தப்பித்து தாய்லாந்து சென்றார். தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்வதற்காக முயன்ற அவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் தாய்லாந்து விமான நிலையத்தில் முடக்கினார். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விஷயத்தில் தலையிட்ட ஐநா சபை, அந்த பெண்ணுக்கு தாய்லாந்து அடைக்கலம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது. இந்நிலையில் அல் குனானுக்கு அடைக்கலம் அளிக்க தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கூறிய நிலையில் சனிக்கிழமையன்று கனடா சென்றடைந்தார் அல் குனான். டோரோன்டோ விமான நிலையத்தில் அந்த பெண்ணை வரவேற்ற கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிரிஸ்டியா, “இவர்தான் ரஹாப் அல் குனான், இவர் கனடாவின் தைரியமான குடிமகள்” என தெரிவித்தார். அந்த பெண்ணுக்கு சரியான நேரத்தில் அடைக்கலம் கொடுத்த கனடா அரசை சர்வதேசப் பெண்கள் நல அமைப்புகள் பாராட்டியுள்ளன.