ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தங்களது நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் ரஷ்யா அண்மையில் அறிவித்தது. ஆனால், மூன்றாம் கட்ட சோதனைகளைச் சரியாக நடத்தாமல் ரஷ்யா அவசரம் காட்டுவதாக உலக நாடுகள் ரஷ்யாவைக் குறை கூறின. ஆனால், தங்களது மருந்து நூறு சதவீதம் சரியாகப் பணிபுரிவதாக ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள இந்தத் தடுப்பூசி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யச் சுகாதாரத்துறையின் அங்கீகாரத்தைப் பெற்றது.
இந்தத் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் இந்தப் புதிய மருந்தினால் இதுவரை பெரிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா தயாரித்துள்ள 'ஸ்புட்னிக்' எனப்படும் இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இதுதொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் 10 கோடி கரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வழங்கவும், இங்கு சோதனைகள் நடத்தவும் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.