மதுவுக்கு அடிமையான வளர்ப்பு நாயை மருத்துவர்கள் பெருமுயற்சிக்குப் பின் காப்பாற்றியுள்ளனர்.
மேற்கு இங்கிலாந்தில் உள்ள ப்ளைமவுத் நகரில், உரிமையாளர் இறந்த நிலையில் அவரது இரு வளர்ப்பு நாய்கள் கண்டெடுக்கப்பட்டன. இரு நாய்களையும் கண்டுபிடித்த விலங்கு நல வாரியம், நாய்களுக்கு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் இரு நாய்களும் மதுவுக்கு அடிமையானது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நாய்கள் அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இரு நாய்களில் ஜியார்ஜி என்ற பெயர் கொண்ட நாய் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட கோகோ என்ற பெயர் கொண்ட நாய் மட்டும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது.
இது குறித்து விலங்கு நல வாரியம் விசாரித்த பொழுது, நாய்களின் உரிமையாளர் மது அருந்துபவர் என்றும் அவர் குடித்துவிட்டு மீதம் வைத்த மதுவை அவருக்குத் தெரியாமல் அடிக்கடி குடித்து வந்த அவரது வளர்ப்பு நாய்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளது என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் நாயின் உரிமையாளர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த பின் மதுவுக்கு அடிமையாகி இருந்த நாய்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாயை கண்டுபிடித்த விலங்கு நல வாரியம், மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். 2 வயதான லேப்ரடார் வகையான கோகோ 4 வாரங்கள் வரை மயக்க நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறும் பொழுது, கோகோ மணிக்கொரு முறை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் தற்போது உடல் நலம் தேறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்று நிகழ்வது இதுவே முதல்முறை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.