ரஷ்யாவில் பிடிபட்ட ‘ப்ளூவேல் அட்மின்’ 17 வயது சிறுமியா?
உலகம் முழுவதும் பல இளைஞர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும், ப்ளூவேல் சேலஞ்ச் விளையாட்டின் அட்மின்களில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
ரஷ்யாவின் கப்ராவ்ஸ்க் ராய் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ப்ளூவேல் விளையாட்டின் அட்மினாக செயல்பட்டு வந்துள்ளார். இவரை தனிப்படை அமைத்து பிடித்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ப்ளூ வேல் சேலஞ்ச் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பல பக்கங்கள் மற்றும் குழுக்களுக்கு இவர் அட்மினாக செயல்பட்டு வந்துள்ளார். மேலும், இந்த விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் கட்டளைகளை ஏற்காத பட்சத்தில், அவர்களை அல்லது அவர்களது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார்.
இவர் முதலில் ப்ளூவேல் விளையாட்டில் கலந்துகொண்டு, பின்னர் 50-ஆவது நாளான இறுதி சவாலை முடிக்காமல், இந்த விளையாட்டின் அட்மினாக செயல்படத் தொடங்கியுள்ளார். இவர், ப்ளூவேல் அடிமைகளிடம் ஆணாக அறிமுகமானதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ப்ளூவேல் விளையாட்டு ரஷ்யாவில் ஃபிலிப் புடிகன் என்பவனால் உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த விளையாட்டால் உலகம் முழுவதும் 150 பேர் தற்கொலை செய்துள்ளனர். நேற்று மதுரையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்குக் காரணம் ப்ளூவேல் விளையாட்டுதான் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்