Skip to main content

முடிவுக்கு வந்த உள்நாட்டுக் குழப்பம்; பின் வாங்கிய வாக்னர் ஆயுதக் குழு

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

russia army internal affairs issue update

 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதில் உறுதியாக இருந்து வந்தது. இதையடுத்து ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரைத் தொடங்கிய நிலையில் இன்று வரை தொடர்கிறது.

 

இந்த போரில் ரஷ்யா சார்பில் ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து வாக்னர் குழுவினர் என்ற பெயரில் ஆயுதக் குழுவினர் போரில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களைத் தனியார் ராணுவம் என அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்தக் குழு ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தற்போது ரஷ்ய நாட்டு ராணுவத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது புதினுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது.

 

இதையடுத்து ராணுவத்திற்கு எதிராக, ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த ராணுவ அலுவலகத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அப்போது ரஷ்ய அதிபர் புதின் இது குறித்து உரையாற்றுகையில், “ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தேசத் துரோகிகள்” எனத் தெரிவித்தார். ஆயுதக் குழுவினரைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் நிலவியது.

 

இந்நிலையில் வாக்னர் ஆயுதக் குழு ரோஸ்டோ நகரைக் கைப்பற்றின. இதையடுத்து லிக்வெட்ஸ் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் மாஸ்கோ நோக்கிப் படையெடுத்தனர். இதனால் ரஷ்யா முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. மாஸ்கோ நோக்கி வாக்னர் ஆயுதக் குழு முன்னேறுவதைத் தடுக்க ரஷ்ய ராணுவம் சார்பில் பாலங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் போலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கெஸ்கோ, வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் பிரிகோஜின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து வீரர்கள் ரத்தம் சிந்துவதைத் தடுக்க மாஸ்கோ நோக்கிச் செல்வதைக் கைவிடுவதாக பிரிகோஜின் அறிவித்தார். இருப்பினும் ரஷ்யா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மக்களின் அன்றாடப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள்நாட்டில் நிலவும் பதற்றமான சூழலை உலகத் தலைவர்கள் பலரும் கவனித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்