ரஷியா, ஈரான், வடகொரியா மீது பொருளாதார தடைக்கு -
அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார்
ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு பல்வேறு வகையில் தீங்குகள் விளைவிப்பதால் அந்த நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்தது.
இது சம்பந்தமாக அமெரிக்க கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். அதன்படி செனட் சபைக்கு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் ஓட்டு போட்டனர். இதனால் மசோதா நிறைவேறியது.
அடுத்ததாக இந்த மசோதா மீது அதிபர் டிரம்ப் கையெழுத்திட வேண்டும். டிரம்ப் இதை ஏற்பாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே இந்த முடிவு எடுக்கப்பட்ட போதே அதற்கு டிரம்ப் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை, பொருளாதார தடை மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார் என கூறியுள்ளது.