ஆப்கானிஸ்தானில் தங்களது இடைக்கால அரசை நிறுவியுள்ள தலிபான்கள், முகமது ஹசன் அகுந்த்தை ஆப்கன் பிரதமராகவும், தங்கள் இயக்கத்தின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதரை துணை பிரதமராகவும் அறிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கும், தனி குழுவாக இருந்து பின்னர் தலிபான்களுடன் இணைந்த ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்தநிலையில் முல்லா அப்துல் கனி பராதருக்கும், ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் மோதல் நடைபெற்றதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை மறுத்த தலிபான்கள், தான் உயிரோடு இருப்பதாக அப்துல் கனி பராதரே ஆடியோ வெளியிட்டுள்ளார் என தெரிவித்ததோடு, அவர் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்த சூழலில் அப்துல் கனி பராதருக்கும், ஹக்கானி நெட்வொர்க்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலீல்-உர்-ரஹ்மான் ஹக்கானிக்கும் கடந்த வாரம் வார்த்தை மோதல் நடைபெற்றதாக சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய தலிபான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கலீல்-உர்-ரஹ்மான் ஹக்கானி, ஹக்கானி நெட்வொர்க்கின் நிறுவன தலைவரான ஜலாலுதீன் ஹக்கானியின் சகோதரராவார்.
தலிபான் அரசில் முக்கிய பொறுப்புகளை வகிப்பது யார் என்பது தொடர்பாகவும், ஆப்கனைக் கைப்பற்றியதற்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ள தலிபான் வட்டாரங்கள், அப்துல் கனி பராதருக்கும் கலீல்-உர்-ரஹ்மானுக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றபோது இருவரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதன்பிறகு அப்துல் கனி பராதர் காபூலைவிட்டு வெளியேறி காந்தகாருக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, அப்துல் கனி பராதர் தலிபான் உச்ச தலைவரை சந்திக்க காந்தகாருக்குச் சென்றதாக முதலில் கூறிய தலிபான் செய்தித்தொடர்பாளர், பின்னர் அவர் சோர்வாக இருப்பதாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அப்துல் கனி பராதர் நிலை என்ன ஆனது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.