Skip to main content

தலிபான்களிடமிருந்து மாவட்டங்களை கைப்பற்றிய எதிர்ப்பு குழு!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

afghanistan

 

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயத்தில் ஆப்கானிஸ்தானின் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, தன்னை ஆப்கனின் காபந்து அரசு அதிபராக அறிவித்துக்கொண்டார். மேலும், ஆப்கன் அரசியல் தலைவர்களைத் தொடர்புகொண்டு தனக்கு ஆதரவு பெறும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிவித்தார்.

 

இதன்தொடர்ச்சியாக அம்ருல்லா சாலே, அஹ்மத் மசூத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அஹ்மத் மசூத், தலிபான் எதிர்ப்புக் குழு ஒன்றின் தலைவராக இருந்த அகமது ஷா மசூத்தின் மகனாவார். தலிபான் கட்டுப்பாட்டில் இல்லாத பாஞ்ஷிர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, அம்ருல்லா சாலே - அஹ்மத் மசூத் இணைந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு போராளி குழுவை உருவாக்குகிறார்கள் என தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், வடக்கு பாக்லான் மாகாணத்தில் புல்-இ-ஹேசர், தேஹ் சாலா, கசான் ஆகிய மூன்று மாவட்டங்களைத் தலிபான்களிடமிருந்து தலிபான் எதிர்ப்புக் குழு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், அம்ருல்லா சாலேவுடன் கைக்கோர்த்துள்ள ஆப்கனின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிஸ்மில்லா முஹம்மதி, புல்-இ-ஹேசர், தேஹ் சாலா, பானு மாவட்டங்களை எதிர்ப்புக் குழுக்கள் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

 

தலிபான்களுக்கும் எதிர்ப்பு குழுவுக்கும் நடந்த மோதலில் 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்