வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து இயக்கியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர். இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் திரையரங்குகள் உள்ள பகுதி மற்றும் சாலை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விஜய் திரைப்படத்தின் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் திரையரங்குகளுக்கு வெளியே ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் ரவுண்டானா அருகில் உள்ள திரையரங்கிற்கு வெளியே 20க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் மாநகராட்சி அனுமதிபெற்று 17 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அனுமதியின்றி நான்குக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க ரசிகர்கள் உள்ள சென்ற நிலையில் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த நான்குக்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.