யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் (Universal Peace Federation) தொண்டு நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் 'அமைதிக்கான தூதர்' விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான 'அமைதிக்கான தூதர்' விருதுக்கு (Ambassador for Peace) நக்கீரன் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங்காவலரான டாக்டர். அப்துல் பாசித் சையத், நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்தவும், துணிச்சலான முயற்சிகளை எடுத்த 'நக்கீரன் ஆசிரியர்' குறித்து இந்த அமைப்பின் செயலாளர் ராபின் மார்ஷிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நக்கீரன் ஆசிரியருக்கு 'அமைதிக்கான தூதர்' விருது வழங்க முடிவு செய்த யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன், அதற்கான அழைப்பு கடிதத்தை நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது. பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் இவ்விருதை வழங்கினார்.
இவ்விருதினை பெற்றதற்காக பல்வேறு தரப்புகளிடம் இருந்து நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தமிழ்மாமணி முனைவர் தாழை. இரா. உதயநேசன் வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில்
'' 'இதழியல் வேந்தர்' நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கம், "யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன்" நிறுவனத்தின் சார்பில் "அமைதிக்கான தூதர்" விருது தங்களுக்கு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் பெற்ற இந்த விருது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் கிடைத்த உயரிய மதிப்பாக நான் கருதுகிறேன். தங்களின் மேலான பணி, நீதியை நிலைநாட்ட உழைக்கும் துணிவு, பத்திரிகை சுதந்திரத்தைப் போற்றும் உயர்ந்த உள்ளம் ஆகியவற்றிற்குக் கிடைத்த உரிய அங்கீகாரம் என்று எட்டு கோடி மக்களில் ஒருவனாக நானும் பெருமிதம் கொள்கிறேன். வரும் காலங்களில் இன்னும் பிற விருதுகள் இமயமாய் குவிந்து தங்களை மேன்மைப்படுத்திட வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.