கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000 கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.
இந்நிலையில் பல மாநிலங்கள் நிவாரண உதவிகளை நிதியாகவும், நிவாரண பொருட்களை அனுப்பியும் கேரளாவிற்கு உதவி வருகின்றன. அதேபோல் வெளிநாடுகளும் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தனை உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் தயார் என கூறியுள்ளார். அதேபோல் அங்கு இயல்பு நிலை திரும்ப பாகிஸ்தான் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.