ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்ற ஜெட் விமானம் ஒன்று திடீரென வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. இதில் ஜெட் விமானத்தில் பயணம் செய்த 3 பணியாளர்கள், 7 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏழு பயணிகளில் ரஷ்ய அதிபருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் ஒருவர் எனத் தகவல் வெளியானது. மேலும் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் ப்ரிகோஜினின் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போரில் ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து வாக்னர் குழுவினர் என்ற பெயரில் ஆயுதக்குழு ஒன்று ஈடுபட்டு வந்தது. இந்தக் குழு ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இந்த போரில் ரஷ்ய ராணுவம் தங்களுடைய வீரர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டி ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் செய்தார். பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சரி செய்தார். இந்த நிலையில்தான் விமான விபத்தில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் உயிரிழந்தது ரஷ்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா அதிபர் புதின், வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ‘தவறுகள் செய்த திறமையான மனிதர்’ என்றும் தெரிவித்துள்ளார்.