இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளராக இருக்கிறார் கமால் குணரத்ன! இவர், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்த நிலையில், ’நந்திக்கடலுக்கான பாதை ‘ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவால் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி பல்வேறு தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார் கமால் குணரத்ன! பிரபாகரனை பற்றி பதிவுசெய்யும்போது, “பிரபாகரன் அவர்கள் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தைப் பேணியவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த ஒரு சான்றுமே கிடையாது. அவர், ஒரு அன்பான குடும்ப மனிதாரக இருந்தார்.
பிரபாகரனிடத்திலிருந்தும் அவரது குடும்பத்தினரிடத்திலிருந்தும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளிலிருந்தும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒளிப்படங்களை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றியிருந்தோம். ஒரு படத்தில் கூட மதுபானக் குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராகவே இருந்தார். ஷரியத் சட்டத்தைவிட மேலான சட்டத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தார் பிரபாகரன். ஒரு திருட்டு நடந்திருந்தால் திருடியவர், ஷரியத் சட்டத்தில் தன் கைகளைத்தான் இழக்க நேரிடும்; ஆனால், பிரபாகரனின் சட்டத்தில் வாழ்க்கையை இழப்பார்கள்.
சைவ சமயத்தை பிரபாகரன் ஏற்றிருந்தாலும், கடவுளை அவர் நம்பவில்லை! கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில்தான் இருக்கிறார் என ஒருமுறை கூறியிருந்தார். அவர் வித்தியாசமான தலைவர்! பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் பிரபாகரனிடம் இருந்தது”’ என்று தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன!