மருத்துவமனையில் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் சாமர்த்தியத்தால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் ரஷ்யா உக்ரைனில் 2 அடிகள் பின்வாங்கி, நடத்திய தாக்குதலில், உக்ரைன் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
ரஷ்யா நவம்பர் 15 அன்று உக்ரைன் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலால் உக்ரைனின் மின்சார கிரிட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டுள்ளன. மேலும் உக்ரைனின் தலைநகரான கியூவ் உட்பட பிற நகரங்களில் மின்சாரம் விநியோகம் இல்லாமல் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகரில் மின்சாரக் கட்டமைப்புகளைக் குறி வைத்து ஏவுகணைகளை வீசின. இதனால் உக்ரைன் தலைநகரமே இருளில் மூழ்கியுள்ளது. உக்ரைன் அரசு மீண்டும் மின்சாரம் கொண்டு வரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிக அவதியுறுகின்றனர். குறிப்பாக மின்சாரம் கட்டாயம் தேவைப்படும் இடமான மருத்துவமனைகள், குழந்தைகள் இருக்குமிடங்கள் போன்றவற்றில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
உக்ரைன் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போதே மின்சாரம் தடைபட்டதால் பேட்டரி விளக்குகளைக் கொண்டு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர்களின் திறமையால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.