கரோனா தடுப்பூசி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என போப் ஆண்டவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் கரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த சில மாதங்களாக இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதிகரித்து வரும் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை பெரும் அச்சத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கரோனா தடுப்பூசிகள் குறித்து தற்போது போப் ஆண்டவர் கருத்துக் கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய போப் ஆண்டவர், "கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படக் கூடாது. அம்மருந்து எந்த ஒரு நாட்டினருக்கும் தனி உடமையாக இல்லாமல் ஒட்டு மொத்த உலகத்திற்குமானதாக இருக்க வேண்டும். இது இரண்டும் நடக்காத பட்சத்தில் அது வருந்தத்தக்க ஒன்றாக மாறிவிடும்" என்றார்.
இதுவரை 150க்கும் மேற்பட்ட கரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் உலகளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பல இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.