இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசிக்கு, இன்னும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதி தனிமைப்படுத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில் வேறு பல நாடுகள், கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன. அவ்வாறு அங்கீகாரம் அளித்துள்ள நாடுகளுக்கு கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் சென்றால் தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தேவையில்லை. இந்தநிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. எனவே கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாகவே கருதப்படுவர். இதனால் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தேவையில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழு, நாளை கோவாக்சினுக்கு அவசரக் கால அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் கோவாக்சினுக்கு அவசரக்கால அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக விவாதித்த உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழு, கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கூடுதல் தகவலைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.