பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.