வறுமை மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான துருக்மெனிஸ்தானில், 19 அடி உயரத்தில் நாய் ஒன்றிற்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
துருக்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலிக்கு விருப்பமான நாய் இனமாகப் பார்க்கப்படுவது அலாபை எனும் இன நாய் ஆகும். மேய்ச்சல் நாயான இது, துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாகவும், அதிபரைக் கவர்ந்த நாய் இனமாகவும் அங்கு இருந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான அஸ்காபாத்தில் அமைந்துள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தங்கத்தால் பூசப்பட்ட இந்த சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. தங்க நாயின் சிலையை வடிவமைக்க உண்டான செலவு குறித்து இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், மக்கள் வறுமையில் வாடும் சூழலில், நாய்க்கு இவ்வளவு பெரிய சிலை வைப்பது அவசியமா எனக் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
அதிபர் குர்பங்குலி இந்த நாய் இனத்தைப் பெருமைப்படுத்துவது இது முதன்முறை அல்ல. 2017ஆம் ஆண்டு இந்த நாயை புதினுக்கு அன்பளிப்பாக வழங்கிய அதிபர், கடந்த ஆண்டு அந்த நாய் இனத்திற்காக ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தார். அதேபோல, அகல்தெக குதிரை இனத்தின் மீது ஆசைகொண்ட அதிபர் குர்பங்குலி, தான் அந்த குதிரை மீது சவாரி செய்வது போன்ற தங்கசிலை ஒன்றையும் கடந்த 2015 ஆம் ஆண்டு கட்டமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.