Skip to main content

என்னது இன்னுமா பேஜர் யூஸ் பண்றாங்க!!! 

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
pager


90 களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக  பேஜர் சேவை பற்றியும், பேஜரில் மெசேஜ் வந்தால் அதிலிருந்து வரும் ஒலியும் தெரிந்திருக்கும்.  சிறிய கால்குலேட்டர் போன்ற வடிவில், ரேடியோ அதிர்வலையை பயன்படுத்தி வெறும் மெசேஜ் மட்டுமே அனுப்பக்கூடிய சேவை. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஜப்பானில் இந்த சேவையை 1500 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
 

1950-60 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த பேஜர், 1980களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பிரபலமானது. மொபைல் போன்களை போன்று கையில் எடுத்துகொண்டு செல்ல வசதியாக அப்போதைய காலகட்டத்தில் இருந்தது பேஜர்தான். 90 களில் உலகம் முழுவதும் பல்வேறு வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது இந்த பேஜர் சேவை. தற்போது இந்த சேவையை வைத்திருக்கும் ஜப்பானை சேர்ந்த டோக்கியோ டெலி மெசேஜ் நிறுவனம், அடுத்த ஆண்டு செப்டம்பருடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
 

இந்த நிறுவனத்தில் தற்போது 1500 வாடிக்கையாளர்கள், பேஜர் சேவையில் உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பேஜர் கருவியை உருவாக்கும் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் கீழ் இருந்துள்ளனர். அதே ஆண்டில் பேஜர் சேவையை பயன்படுத்திய ஜப்பானியர்கள் மட்டும் ஒரு கோடி பேராம். பின்னர், காலங்கள் மாற மாற மொபைல் போன்களின் புரட்சி, பேஜர் நிறுவனங்களுக்கு வீழ்ச்சியை தந்தது. சுமார் நாற்பது வருடங்களாக இருந்த பேஜர் சேவை எல்லாம் மூடப்பட்டது. 
 

ஜப்பானுக்கே முதன் முதலில் பேஜரை அறிமுகம் செய்துவைத்த தொலைதொடர்பு நிறுவனமான என்.டி.டி, தன்னுடைய பேஜர் சேவையை 2007 ஆம் ஆண்டே நிறுத்திக்கொண்டது. அடுத்த 10 வருடங்கள் கழித்துதான் டோக்யோ டெலி மெசேஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 50 வருடங்களாக ஜப்பானில் இருந்த சேவையான பேஜர் சேவை முடிவடைய இருக்கிறது. முதலில் இந்த செய்தியை கேட்டபோது,  ‘இன்னுமா இந்த பேஜர் யூஸ் பண்றாங்க’ என்ற வியப்பு தவிர்க்கமுடியாததாக இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்