ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தைவான் அதிபர் லாய் சிங்-டே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தல் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்கள் அன்பான வாழ்த்து செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது, நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்.’ என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பதிலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “தைவான் பிராந்திய அதிகாரிகள் மற்றும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது. உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. ‘ஒரே சீனா கொள்கை’ தொடர்பாக, இந்தியா தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளை செய்துள்ளது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.