அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள வாஷிங்டனில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு அமெரிக்க தலைவர்களும், இந்திய பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜோ பைடன், "ஜனநாயகம் உடையக்கூடியது என்பதற்கு இன்றைய நாள் ஒரு வேதனையான நினைவூட்டல். ஜனநாயகத்தைப் பாதுகாக்க நல்ல எண்ணங்களைக் கொண்ட மக்களும், எழுந்து நிற்க தைரியம் கொண்ட, அதிகாரத்தையும், தனிப்பட்ட நலனையும் பெற விரும்பாத, பொது நன்மையை விரும்பும் தலைவர்கள் தேவை" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஒபாமா, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையை, அதிபர் டிரம்ப் தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் "சட்டப்பூர்வமான தேர்தல் முடிவுகளைப் பற்றி, தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கும் நடப்பு அதிபரின் தூண்டுதலால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையை, வரலாறு சரியாக ஞாபகம் வைத்திருக்கும். இது நாட்டிற்கே அவமானகரமான, அவமரியாதையான தருணம்" என கூறியுள்ளார்.
இந்த வன்முறை குறித்து இந்திய பிரதமர் மோடி, "வாஷிங்டன் டி.சி.யில் நடந்த கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது" என கூறியுள்ளார்.