தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த வடகொரியா, தனது அணு ஆயுத பரிசோதனை தளத்தை மூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரிய போர் நடந்துமுடிந்து 65 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இருநாடுகளுக்கும் இடையேயு எல்லைப்பகுதியில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பில், பூரண அணு ஆயுத ஒழிப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜே-யின் தலைமை ஊடக செயலாளர் யூன் யங் சான், ‘வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத சோதனைகளை முழுமையாக நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் முன்னிலையில் புங்யே-ரி பகுதியில் உள்ள அந்நாட்டின் அணு ஆயுத பரிசோதனை தளத்தை வரும் மே மாதம் மூடுவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளார். பலரும் அந்தத் தளம் ஏற்கெனவே செயலிழந்த ஒன்று என சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அது நல்ல நிலையில் உள்ளது’ என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வடகொரியாவில் அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சோதனை நடத்தும் முயற்சிகளை கைவிடுவதாக அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருந்தார்.