உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு எதிரான இந்த போரில், ரஷ்யாவுக்கு உதவுவதற்காக தங்கள் நாட்டின் ராணுவத்தை வடகொரிய அதிபர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. இந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும், அவ்வப்போது ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார். மேலும், தன்னுடைய எதிரி நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால், அமெரிக்காவுடனான மோதல் போக்கிலும் கிம் ஜாங் உன் ஈடுபட்டு வருகிறார். இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் வடகொரியாவுக்கு, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
இந்த நிலையில், தனக்கு செய்த உதவிக்கு கைமாறாக உக்ரைனுடான போரில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு அளித்து ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ரஷ்யாவுக்கு இந்த மாதம் சுமார் 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி வைத்துள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் மொத்தம் 10,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.