Skip to main content

வடகொரியாவிடம் அணுஆயுதம் இருப்பதால் அமெரிக்கா தாக்காது! - ரஷ்யா

Published on 24/09/2017 | Edited on 24/09/2017
வடகொரியாவிடம் அணுஆயுதம் இருப்பதால் அமெரிக்கா தாக்காது! - ரஷ்யா

வடகொரியாவிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமெரிக்கா நிச்சயமாக அதன்மீது தாக்குதல் நடத்தாது என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லார்வோ தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய செர்ஜீ, அமெரிக்கா வடகொரியாவின் மீது தாக்குதல் நடத்தாது. ஏனெனில், வடகொரியாவிடம் அணு ஆயுதம் இருப்பது அந்நாட்டிற்கு நன்றாகவே தெரியும். இதன்மூலம் வடகொரியாவிற்கு நாம்(ரஷ்யா) முட்டுக்கொடுக்கிறோம் என எண்ண வேண்டாம். கடந்த மாதம் வடகொரியா மிகப்பெரிய ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியிருக்கிறது. இது அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமாவின் மீது வீசிய குண்டைவிட 16 மடங்கு பெரியது. மேலும், இது வடகொரியாவின் ஆறாவது மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனை. பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இந்த விவகாரத்தில் தீர்வுகாண முடியும். ஒருவேளை தாக்குதல் நடத்தப்பட்டால் அதன்மூலம் கொரிய தீபகற்பம், ஜப்பான் மற்றும் அருகிலுள்ள சீனா, ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாவி மக்களும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், ‘சிறுபிள்ளைகளைப் போல அமெரிக்கா, வடகொரியா நாட்டு அதிபர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என ஐநாவில் பேசியது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்