சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து உரிய அனுமதிப் பெறாமல் நடத்தப்படும் சிலந்தி ஆற்றின் தடுப்பணைக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கேரளாவின் மூணாறு செல்லும் சோதனை சாவடி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அமராவதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவது தமிழக நீர் வளத்தை பாதிக்கும். வறட்சி காலத்தில் இது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். எனவே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் மறுபுறம், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான அனுதியை மத்திய அரசிடம் கேரள அரசு கோரியுள்ளது. கேரள அரசின் இந்த முன்மொழிவு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முல்லை பெரியாறு அணை மூலம் நீராதாரம் பெற்று வருகிறது. இந்த அணையால் 5 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு மட்டுமல்லாது ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லை பெரியாறு அணை உள்ளது.
இந்நிலையில் கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. கேரள அரசு கொடுத்துள்ள மனுவில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் கடந்து விட்டது. அணை பலவீனமாக இருப்பதால் இந்த அணை உடைந்தால் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். எனவே முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள வண்டிபெரியாறு பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் புதிய அணை கட்டி முடிக்கப்படும். புதிய அணை கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள அணை இடிக்கப்படும். அப்படி இடிக்கப்படும் பட்சத்தில் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி தமிழகத்திற்கு வழங்கப்படும் நீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கேரளாவின் இந்த புதிய அணை கட்டுவதற்கான முன்மொழிவுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக தேனி மாவட்ட விவசாயிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தேனியில் லோயர்கேம்ப் பகுதியில் தமிழக விவசாய சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.