கமலா ஹாரிஸ் அவர்களின் பிறப்பை அடிப்படையாக வைத்து, அமெரிக்காவின் துணை அதிபராகும் தகுதி அவருக்கு இல்லையென புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவைப் பூர்விகமாக கொண்டவர் என்ற தகவல் தெரிந்ததும் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலானது. அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் ஒருவர் அவரின் பிறப்பு மற்றும் குடியுரிமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் இது பற்றி அவர் எழுதியுள்ள விரிவான கட்டுரை அமெரிக்க அரசியல் வட்டராத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், "நானும் அந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதில் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என்று தெரியவில்லை. வேட்பாளர் தேர்விற்கு முன்னர் ஜனநாயக கட்சி இதையெல்லாம் கவனத்தில் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது கவனிக்கப்பட வேண்டிய தீவிரமான விஷயம்" என்றார்.
கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் தமிழகத்தையும், அவரது தந்தை ஜமைக்கா நாட்டையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டானது இதற்கு முன்பு முன்னாள் அதிபர் ஒபாமா அவர்கள் மீதும் வைக்கப்பட்டது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.