சென்னை மேடவாக்கம் பெரும்பாக்கத்தில் சதுப்புநிலப் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சதுப்புநிலத்திற்கு நடுவே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் பற்றி எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தீ மளமளவெனப் பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதே சமயம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவையினங்கள் இப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். எனவே இந்த தீ விபத்தில் சிக்கி ஏராளமான பறவைகள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இப்பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழி இல்லாததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. சதுப்புநிலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்தானது அதிக வெயில் காரணமாக தீப்பிடித்ததா அல்லது உயர் அழுத்த மின் கம்பி உரசி தீப்பிடித்ததா என விசாரணை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.