இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் ஆறு கட்டங்களாக 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இறுதி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் என உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின்னர், ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் இறுதிக்கட்டத் தேர்தலையொட்டி, கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஜூன் 1-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 1-ம் தேதி அன்று நமது மாநிலத்தில் தேர்தல் இருப்பதால் என்னால் செல்ல முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
அன்றை தேதியில், பஞ்சாப், உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடப்பது எனக்கு தெரியும். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடரும், சில சமயங்களில் அதைத் தாண்டியும் நீடிக்கும். ஒரு பக்கம் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது என்றால், மறுபக்கம் புயல் நிவாரணப் பணி நடந்துகொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் எப்படி செல்ல முடியும்?. எனக்கு நிவாரணப் பணிகள் தான் முன்னுரிமை. நான் இங்கே பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டாலும், என்னுடைய மனம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தான் இருக்கிறது” என்று கூறினார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.