உலகெங்கும் கரோனா வைரஸ் தாக்கத்தால் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் பெருமளவு அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெருமளவு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும், பிரிட்டன் தன்நாட்டு மக்களுக்குச் செய்யும் கரோனா பரிசோதனையின் எண்ணிகையை அதிகரிக்க இருப்பதாகக் கூறியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர், "இந்தாண்டின் இறுதிக்குள் கரோனா தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். அதனால் மக்களுக்குச் செய்கிற பரிசோதனையின் எண்ணிக்கையை இனி அதிகரிக்க உள்ளோம்" என்றார்.
இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் படும்போது இனிவரும் நாட்களில் பரவலின் வேகத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் என்பதே பிரிட்டனின் தற்போதைய திட்டமாக உள்ளது. ஊரடங்கை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும், பரிசோதனையானது மந்தநிலையில் நடைபெறுவதும் முன்னர் அந்நாட்டில் வெகுவாகக் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.