இந்திய சீன எல்லையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு புதிய கிராமம் ஒன்றை சீன உருவாகியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் இந்தியா, பூடான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் எல்லைப்பகுதியைப் பகிர்ந்துகொள்கின்றன. இதில் டோக்லாம் மற்றும் பூடான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா 2 கி.மீ தூரமளவிற்கு ஒரு சிறிய கிராமத்தையே அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவால் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகள், ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்குப் போடப்பட்ட சாலைகள் ஆகியவை புதிதாக வெளியான செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகக் காணும்படி அமைந்துள்ளன. கடந்த மே மாதம் முதல் இந்தியா உடன் எல்லைப்பிரச்சனையில் ஈடுபட்டுவரும் சீனா, தற்போது ஜம்மு காஷ்மீரைக் கடந்து பூடான், சிக்கிம் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபடுவது இந்தியாவுடனான அந்நாட்டு உறவை மேலும் சிக்கலாக்கும் எனக் கூறப்படுகிறது. பாங்க்டா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கிராமம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில், சீனா இதுபோன்ற எந்த கிராமத்தையும் அமைக்கவில்லை என இந்தியாவுக்கான பூடான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நாம்கியல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனா அமைத்த கிராமத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.