சீனாவில் நாய்களை இனி இறைச்சிக்காகவோ, பால் மற்றும் தோலுக்காகவோ வளர்க்கக் கூடாது, என சீனா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்தக் கரோனா, சீனாவின் இறைச்சி விற்பனை அங்காடி ஒன்றிலிருந்தே பரவியதாக நம்பப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு சீனாவின் உணவுப் பழக்கம் மீதான விமர்சனம் உலகம் முழுவதும் எழுந்தது. இந்நிலையில், சீனாவில் நாய்களை இனி இறைச்சிக்காகவோ, பால் மற்றும் தோலுக்காகவோ வளர்க்கக் கூடாது என சீனா அறிவித்துள்ளது. நாய்களைச் செல்லப்பிராணியாக மட்டுமே இனி வளர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன வேளாண்மை மற்றும் ஊரக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "நாய்கள் கால்நடை பிரிவிலிருந்து செல்லப்பிராணிகள் பிரிவிற்கு மாற்றப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தல் இனி சீனாவில் நாய்களை இறைச்சிக்காகவோ, பால் மற்றும் தோலுக்காகவோ வளர்க்க முடியாது, வீட்டில் செல்லப்பிராணியாக மட்டுமே வளர்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.