இந்தோனேசியாவின் மவுண்ட் இலி லெவோடோலோக் எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகிறது.
உலகின் அதிக எரிமலைகளைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்புகள் அண்மைக் காலங்களாகச் சற்று குறைந்துள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அந்நாட்டின் லெம்பாட்டா பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் இலி லெவோடோலோக் எரிமலை வெடித்து மிகப்பெரிய அளவிலான நெருப்பு குழம்பை வெளியிட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வானில் சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மற்றும் எரிமலை தூசிகள் சிதறின. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியிலிருந்து சுமார் 2700 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழப்புகளோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.