இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்ற நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையைத் துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி முகமையும் உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. நிலவுக்கு செல்வதற்கான சந்திரயான் - 3 மேற்கொண்ட 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் முழுவதும் நாசாவும், ஈ.எஸ்.ஏவும் உதவி செய்துள்ளது. நிலவை சுற்றி வரும் தாய்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்விலும் நாசா மற்றும் ஈ.எஸ்.ஏவின் உதவிகள் முக்கியமானது. உலகின் பல இடங்களில் இருந்து அமெரிக்காவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் சந்திரயான் - 3ஐ கண்காணிக்கின்றன. அமெரிக்கா நிறுவியுள்ள பிரம்மாண்டமான ரேடியோ ஆன்டெனாக்கள் வழி சந்திரயான் - 3ன் பயணம் கண்காணிக்கப்படுகிறது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையும் 15 மீட்டர் ஆண்டெனாவின் உதவியையும் இஸ்ரோ நாடியுள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் கூன் கில்லியில் உள்ள 35 மீட்டர் விட்ட ஆண்டெனாவும் சந்திரயானை கண்காணிக்கும் பணியில் உதவி வருகிறது.