இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலரும் மாட்டுச்சாண குளியலில் ஈடுபட்டது சமூகவலைதளங்களில் வைரலானது. மாட்டுச் சாணத்தைக் கரைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ளும் இவர்கள், மாட்டுப் பாலை மேலே ஊற்றி குளியல் மேற்கொள்கின்றனர். இதன்மூலம் கரோனா வைரஸ் தங்களைத் தாக்காது என்று இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதுபோன்று மாட்டுச் சாணத்தால் குளிப்பதால் கரோனாவை விரட்டலாம் என்பதுபோன்ற எந்த அறிவியல்பூர்வமான நிரூபணமும் இல்லை எனக் கூறும் மருத்துவர்கள், இதனால் வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், அமெரிக்க சுங்கத்துறை, மாட்டு சாணங்களைத் தங்கள் நாட்டிற்கு எடுத்து வர வேண்டாம் என இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்திய பயணி ஒருவரின், உடைமைகளில் மாட்டு சாணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க சுங்கத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அமெரிக்க சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்து வரும் மாட்டு சாணங்களால், இங்கு இருக்கும் விலங்குகளுக்குத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதால், அவை இங்கு தடைசெய்யப்பட்டுள்ளன என்றும், எனவே அதனை அமெரிக்காவிற்கு எடுத்து வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.