அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி! அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து உரையாடினார் மோடி.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பைப் பற்றி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலோ, துணை அதிபருக்குரிய ட்விட்டர் பக்கத்திலோ பதிவு எதையும் வெளியிடவில்லை கமலா ஹாரிஸ். சந்திப்பு முடிந்து பல மணி நேரம் கடந்தும் கூட எந்த பதிவையும் போடவில்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு படங்களையும் வெளியிட்டுள்ளார்.130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்திருக்கிறார் கமலா ஹாரிஸ்! தவிர்த்ததற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவும் இல்லை.
அதேசமயம், நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு ஜாம்பியா நாட்டின் அதிபரை சந்தித்தார் ஹாரிஸ். அந்த சந்திப்பு பற்றிய தகவல்களையும், வீடியோவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹாரிஸ். இரண்டு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில், இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை ஹாரிஸ் தவிர்த்திருப்பது, இது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் முழுவதும் இது குறித்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கமலா ஹாரிஸ் சந்திப்பு குறித்த ட்விட்டைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, "நரேந்திர மோடிக்கு பின்னர், தான் சந்தித்த ஆப்பிரிக்க நாட்டு அதிபர் சந்திப்பு பற்றி ட்விட் செய்துள்ள கமலா ஹாரிஸ், அதற்கு முன் நடந்த மோடியின் சந்திப்பு குறித்து பதிவு எதுவும் இட்டதாக நான் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச அரங்கத்தில் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவமதித்தாரா? என்ற சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வேகமெடுத்துள்ளன!
இந்த நிலையில், உலக அளவில் சர்ச்சைகள் எழுந்ததால் வெள்ளை மாளிகையின் அறிவுறுத்தலின் பேரில் மோடியின் சந்திப்பைப் பதிவு செய்தார் கமலா ஹாரிஸ்!