ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோகோ கோலா, ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் ஃபேஸ்புக் தளத்தில் கொடுத்துவந்த விளம்பரங்களை குறைத்த நிலையில், இதன் காரணமாக சுமார் 54,000 கோடி ரூபாய் அளவு தனது சொத்துமதிப்பை இழந்துள்ளார் மார்க் சக்கர்பெர்க்.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்கள், அமெரிக்காவின் பல இடங்களில் கலவரங்களாக மாறியது. இந்த சூழலில், போராட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனப் பொருள்படும் அந்த ட்வீட் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக்கூறி தனது தளத்திலிருந்து நீக்கியது ட்விட்டர். ஆனால் பேஸ்புக் நிறுவனமோ, ட்ரம்ப்பின் அந்த பதிவை நீக்கவில்லை.
மேலும், இதுகுறித்து பேசிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், "ஆலோசனைக் கூறுபவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். அனைவரின் ஆலோசனைகளையும் நாங்கள் மதிக்கிறோம். உள்ளடக்கக் கொள்கைகள் குறித்து எங்கள் குழுவுடன் ஆலோசித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார். ஆனால், ட்ரம்ப்பின் பதிவை நீக்காத மார்க்கின் செயல் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான பல பதிவுகள் மற்றும் விளம்பரங்களும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இதனைக் காரணமாகக்காட்டி கோகோ கோலா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டார்பக்ஸ், ஹோண்டா, வெரிசோன், ஹெர்ஷே கோ போன்ற உலகின் பல முன்னணி நிறுவனங்கள், ஃபேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்தின. இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 8.3% அளவுக்குச் சரிந்தன. இந்த கடும் சரிவின் காரணமாக மார்க்கின் சொத்து மதிப்பில் சுமார் 54,000 கோடி ரூபாய் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. மேலும், ஒரே நாளில், உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் மார்க்.