இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரியில் தேர்தல்
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையுடன் கூடிய சீர்திருத்தங்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டும் தேர்தலை தள்ளிவைக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் ஜனநாயகத்தை அரசு சீர்குலைப்பதாக மகிந்த ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, உள்ளூர் அரசு அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட விதிமுறைக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து, வாக்கெடுப்பை புறக்கணித்தது. ஆனால், தேர்தல் நடைமுறைகள் மேலும் சுதந்திரமாக நடைபெறுவதற்கு அந்த விதிமுறை அவசியம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், 330-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘தேர்தலை விரைந்து நடத்தி முடிப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்கிறோம். டிசம்பர் மாதம் நடத்த தவறினால் ஜனவரி மாதத்தில் கண்டிப்பாக தேர்தல் நடத்தப்படும்’ என தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியா கூறினார்.