வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்க நிலப்பரப்பின் அடிப்படையில் 4வது நாடாக இருந்தாலும், இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-09-23) டேனியல் புயல் தாக்கியது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளைக் கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால், டெர்னா, பெங்காஸி, பெடா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துள்ளன. சில அணைகள் இடிந்தும் விழுந்துள்ளன. இந்த வெள்ளத்தில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி இருக்கலாம், எனவே அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்டவை தடைப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்களும் வெளியாகி வருகிறது. வெள்ளம் பாதித்த டெர்னா நகரைப் பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஹமாட் அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் உத்தரவிட்டுள்ளார்.
பாதிப்பு மிக மோசமாக இருக்கும் பகுதியான கிழக்கு சிரேனைக்கா மாகாணத்தில் மூன்று பகுதிகளை வெள்ளம் காரணமாக பேரழிவுப் பகுதியாக அறிவித்து சர்வதேச உதவியைக் கோரியுள்ளதாக லிபியா ஜனாதிபதி கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, லிபியா பிரசிடென்சி கவுன்சிலின் தலைவர் மொஹமட் மென்ஃபி, வெள்ளத்தால் ஏற்பட்ட பரவலான பேரழிவைச் சமாளிக்க சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், "சகோதர மற்றும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.