இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலின் தாக்குதல் வளையத்திற்குள் சிக்கிவிடக்கூடாது என்று பல்வேறு யுத்திகளை கையாண்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு பேஜரை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று லெபனானில் இருக்கும் சில அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஹமாஸ் அமைப்பைச் சேராத பலரும் பேஜர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(17.9.2024) மாலை 3 மணியளவில் லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மக்கள் பயன்படுத்திய பேஜர் வெடித்துச் சிதறியது. அதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகம் இருக்கும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,800 பேர் காயமடைந்துள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் வெடிக்கத் தொடங்கிய பேஜர், ஒரு மணிநேரம் தொடர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் பணிக்குத் திரும்பினர். உயிரிழந்த 12 பேரில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும், அதேசமயம் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று கூறி ஹிஸ்புல்லா அமைப்பு, பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நிச்சயம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடக்குவதற்குள் நேற்று(18.9.2024) லெபனானில் பல வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 32 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வாக்கி டாக்கி வெடிப்பால் ஆங்காங்கே தீப்பற்றி வீடுகள், வாகனங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குச் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கும் பின்னும் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.