300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு எடுத்து நிகரகுவா என்ற நாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, துபாயில் இருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் எரி பொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.
பெரும்பாலான இந்தியர்கள் பயணித்த அந்த விமானத்தில், ஆள்கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில், அந்த விமானம் நிகரகுவா நாட்டுக்கு புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விமானத்தில் பயணித்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது இலங்கையை சேர்ந்தவர்களா என தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இது மட்டுமின்றி விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளை பேசுவதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியின. இதையடுத்து, அந்த விமானத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்து, பயணிகள் அனைவரையும் விமான நிலைய கட்டடத்தில் தங்கவைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் விமான பயணிகள் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் இல்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, 4 நாள் விசாரணைக்கு பின் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் இன்று (26-12-23) காலை இந்தியா வந்தடைந்தது.