குவைத்தில் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் பணிபுரியும் எட்டு லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் பணிபுரியும் வெளிநாடுகளின் பட்டியலில் மிகமுக்கியமான நாடு குவைத். லட்சக்கணக்கான இந்தியர்கள் குவைத்தில் தங்கி அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடு வாழ் மக்கள் எண்ணி்க்கையைக் குறைக்கும் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை குவைத் அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே குவைத்தில் வசிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த மசோதாவின்படி தற்போது குவைத்தில் உள்ள 12 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார்கள். இந்தியாவைத் தவிர பிற ஆசிய நாட்டினரும் இந்த மசோதாவால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தங்களது நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஷபாப் அல் காலித் அல் ஷபாப் கூறியுள்ளார்.