நாடு முழுவதும் ஏற்பட்ட பெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்துள்ளது ஹாங்காங் அரசு.
ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் புதிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சுதந்திர பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது.
இத்தனை ஆண்டுகாலங்களில் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை பல நாடுகளுடன் ஹாங்காங் மேற்கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் இந்த ஒப்பந்தம் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து ஹாங்காங் முழுவதும் கடுமையான போராட்டங்கள் வெடித்தன. லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் என ஒட்டுமொத்த நாடும் சேர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தினர்.
இதன்காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம், மசோதா முழுமையாக திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.